google-site-verification=WRg6bEtXNXhL_k05MQClv6BBqiLpjk8UvRM3vmTcqrQ புதிய வேளாண் சட்டங்கள் (the agricultural reforms Bill, 2020)
kajukhathily.blogspot.com

 புதிய வேளாண் சட்டங்கள்

(the agricultural reforms  Bill, 2020)

         மத்திய பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுவருகிறது. அவை ஒவ்வொன்றும் ஆதரவு - எதிர்ப்பு எனப் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில், வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத் திருத்தங்களை அண்மையில் கொண்டுவந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.


விவசாய சீர்திருத்தங்கள் குறித்த மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன 

    1) விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020' (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020) 

  2) வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020' (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)

   3) அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020' (Essential Commodities (Amendment) Act 2020)

    இந்த மூன்று மசோதாக்கள் செப்டம்பர் 14 அன்று நாடாளுமன்றத்தில்                      அறிமுகப்படுத்தப்பட்டன.

விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020

நன்மைகள்

      தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் உற்பத்திப்பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் விவசாயிகள் முதலிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விளைவித்த பொருளை ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம்.

       சந்தையில் அதிக அளவில் வரத்து இருக்கும் பொருளையே ஒரு விவசாயி விளைவித்திருந்தால், அந்தப் பொருளுக்கான விலை மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அதிக செலவு செய்து உழைத்த விவசாயியின் முழு உழைப்பும் இந்தச் சந்தைப் பொருளாதாரத்தால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்.

      இந்தச் சிக்கலை ஒழிப்பதற்காக முன்கூட்டியே ஒப்பந்தத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்துகொள்வதால், விலை வீழ்ச்சி எனும் அபாயத்திலிருந்து விவசாயி பாதுகாக்கப்படுகிறார்.

 தீமைகள்

   பெரு நிறுவனங்கள் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, கான்ட்ராக்ட் முறையில் விளைபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகளை அதிகாரபூர்வமாக இந்தச் சட்டம் செய்துதருகிறது. இதன் மூலம் சொந்த நிலத்திலேயே விவசாயிகள் கூலிகளாக்கப்படுவார்கள்.

   ஆக, இந்த ஒப்பந்தச் சட்டம் என்பது, பணம் படைத்தவர்கள் தங்கள் பண்ணை நிர்வாகத்தை அதிகாரபூர்வமாக செய்துகொள்ளவே வழிவகுக்கும்.




வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020.

 நன்மைகள்

    விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம். இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை, கூடுதல் லாபம் கொடுக்கும் வியாபாரியிடம் விற்று, லாபம் பார்க்க வழிவகை ஏற்படும்.


 தீமைகள்

   சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வெளி மாவட்டத்துக்கோ அல்லது மாநிலங்களுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்தச் சூழலில், குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் விளைபொருள்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டுக் கம்பெனிகளும் அறிந்துகொண்டு, விவசாயிகளிடமிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வதற்கே இந்தப் புதிய சட்டம் வழிவகுக்கும். 



அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020

நன்மைகள்

          அரசு கொண்டுவந்திருக்கும் புதிய `அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020', வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்கியிருக்கிறது. எனவே, `மேற்கண்ட பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை’ என்கிறது புதிய சட்டம்.
     உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருந்துவருகிறது. ஐந்து வருடங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கைவசம் உள்ளன. எனவே, உணவுப் பொருள்களுக்குப் பஞ்சம் இல்லாத இந்தக் காலகட்டத்தில், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் என்ற ஒன்றே தேவையற்றது' என்கிறது அரசு.

 தீமைகள்

      இனி பெரு நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை அளவுக்கதிகமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக சந்தையில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். பின்னர், தங்களிடமுள்ள பதுக்கல் பொருளை அதிக விலைக்கு சந்தையில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கும். ஆக, பெரு நிறுவனங்கள் இதுவரை பயந்து பயந்து செய்துவந்த பதுக்கல் மற்றும் மறைமுக ஏற்றுமதி மோசடிகளை, வெளிப்படையாகச் செய்வதற்கு இந்தப் புதிய சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது.


 









Post a Comment

பக்கங்கள்

தொடர்பு படிவம்